மக்கள் கேட்கும் கேள்விகள்

உங்கள் கேள்வி இங்கே இல்லையென்றால் எங்களுக்கு எழுதுங்கள் — அதற்கான பதிலும் இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும்.

நான் பதிவு செய்ததை யாராவது கண்டுபிடிக்க முடியுமா?
உங்கள் பெயர் விருப்பத்திற்குரியது; அது பொது தளத்தில் ஒருபோதும் காட்டப்படாது. தொலைபேசி எண், மின்னஞ்சல், ஆதார், பான், முகவரி எதையும் நாங்கள் கேட்பதில்லை; உங்கள் IP முகவரியை உங்கள் பதிவுடன் சேமிப்பதும் இல்லை. ஒரு சீரற்ற குக்கீ (cookie) உங்கள் உலாவியில் இருக்கும் — அது ஒரே சாதனத்திலிருந்து தொடர்ந்து பதிவுகள் வருவதைத் தடுக்க மட்டுமே; அதில் உங்களைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை, உங்கள் பதிவுடன் அது இணைக்கப்படுவதும் இல்லை. வருகைகளை கணக்கிட இத்தளம் Google Analytics பயன்படுத்துகிறது (எந்தப் பக்கங்கள் திறக்கப்படுகின்றன, தோராயமாக எந்த நாடு, சாதனம், உலாவி என்பது); பதிவுப் படிவத்தில் நீங்கள் எழுதுவது அதற்குச் செல்லாது.
இது ஒரு புகாரா? அதிகாரிக்குத் தண்டனை கிடைக்குமா?
இல்லவே இல்லை. இது புகார் அளிக்கும் சேவை அல்ல; நீங்கள் இங்கே எழுதுவது எந்த அதிகார அமைப்புக்கும் அனுப்பப்படாது. என்ன நடக்கிறது என்பதைக் கணக்கிடுவதே இதன் நோக்கம்; யாரையும் தண்டிப்பது அல்ல. முறையான புகாருக்கு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுத் துறையை (DVAC) அணுகவும் — அதன் நடைமுறை வேறு, Nolanjam நடைமுறை வேறு; நீங்கள் இரண்டையும் செய்யலாம்.
அப்படியானால் அதிகாரியின் பெயரையும் பதவியையும் ஏன் கேட்கிறீர்கள்?
இரண்டுமே விருப்பத்திற்குரியவை. பல பதிவுகள் ஒரே அலுவலகத்தைப் பற்றியவை என்பதை நிர்வாகி அறிந்துகொள்ள அவை உதவுகின்றன — ஒரு புகாருக்கும் ஒரு போக்குக்கும் உள்ள வேறுபாடு அதுதான். அவை தனியாகச் சேமிக்கப்படுகின்றன, ஒருபோதும் வெளியிடப்படுவதில்லை; அதிகாரியின் பெயரால் பொதுத் தேடலோ, பட்டியலோ கிடையாது.
சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும்?
நிர்வாகிகளைத் தவிர யாருக்கும் தெரியாது. ஒரு நிர்வாகி அதைப் படித்து அங்கீகரிப்பார், நிராகரிப்பார், அல்லது நகல் எனக் குறிப்பார். அங்கீகரிக்கப்பட்ட பதிவுகள் மட்டுமே கணக்கில் சேரும்; அதிலும் பெயர் தெரியாத பகுதிகள் மட்டுமே — மாவட்டம், வட்டம், பகுதி வகை, துறை, தேதி, தொகை, சேவை.
பணம் கேட்டார்கள், ஆனால் நான் கொடுக்கவில்லை. இதையும் பதிவு செய்யலாமா?
கண்டிப்பாகச் செய்யுங்கள். கொடுக்க மறுத்த கோரிக்கைகள் தனியாகக் கணக்கிடப்படுகின்றன; அவையும் சமமாக முக்கியம் — எத்தனை முறை மக்களிடம் கேட்கப்படுகிறது என்பதை அவை காட்டுகின்றன. படிவத்தில் "கேட்டனர், ஆனால் செலுத்தவில்லை" என்ற விருப்பம் உள்ளது.
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இப்போது பதியாலாமா?
தாராளமாக பதியலாம். 2000-ஆம் ஆண்டு முதல் எந்தத் தேதியையும் தேர்ந்தெடுக்கலாம். பழைய பதிவுகளும் அந்த மாவட்டத்தின், துறையின் வாகயில் சேரும்; எதிர்காலத் தேதிகள் மட்டுமே ஏற்கப்படாது.
இதை யார் நடத்துகிறார்கள், செலவை யார் ஏற்கிறார்கள்?
இது சிறிய, வணிக நோக்கமற்ற, தன்னார்வ முயற்சி. எந்த அரசு அமைப்பு, அரசியல் கட்சி அல்லது நிறுவனத்திடமிருந்தும் நிதி இல்லை; விளம்பரமும் இல்லை.
சில நேரங்களில் மொத்தத் தொகைகள் ஏன் தெரிவதில்லை?
புள்ளிவிவரங்களை வெளியிடுவது தானாக நடப்பதல்ல; தற்போதைக்கு மொத்த தொகையும் காட்டினால் பாரபட்சமாக இருக்கும் என்பதால், ஒரு சில வாரங்கள் கடந்த பின் மொத்த தொகையும் காட்டப்படும்.
என் பதிவை நீக்க முடியுமா?
முடியும். சமர்ப்பித்த பிறகு காட்டப்பட்ட உங்கள் பதிவு எண்ணுடன் (TNBC-… என்ற குறியீடு) தொடர்புப் பக்கத்திலிருந்து எங்களுக்கு எழுதி, நீக்கக் கோரலாம். அந்த எண்ணைப் பத்திரமாக வைத்திருங்கள்; உங்கள் பதிவைச் சுட்டிக்காட்ட அதுவே ஒரே வழி — அது உங்களை அடையாளம் காட்டாது.
இந்த இணையதளத்தை என் தொலைபேசியில் திறப்பது பாதுகாப்பானதா?
இந்த இணையதளம் மறைகுறியாக்கப்பட்ட (Encrypted) இணைப்பில் இயங்குகிறது; எந்த அனுமதியும், செயலி நிறுவலும், உள்நுழைவும் கேட்கப்படுவதில்லை. உங்கள் மொழித் தேர்வு, எதிர்-ஸ்பேம் குக்கீ, Google Analytics-இன் வருகை எண்ணிக்கைக் குக்கீகள் தவிர உங்கள் தொலைபேசியில் எதுவும் சேமிக்கப்படாது. தொலைபேசியை வேறு யாருடனாவது பகிர்ந்து பயன்படுத்தினால், தனிப்பட்ட சாளரத்தில் (private window) திறந்தால் எந்தத் தடயமும் இருக்காது.